சென்னை:இந்தியாவில் 8,918 கல்லூரிகளில் 2022-23 ம் கல்வியாண்டில் பொறியியல், கட்டடக்கலை, நிர்வாகம் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள், தங்களுக்கான அங்கீகாரத்தை ஆண்டுதோறும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
அதன்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன. புதிய கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு பொறியியல் கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றன. இதற்கான அவகாசம் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் ஏப்ரல் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளும் 2023-24 ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு ஜனவரி 13-ந் தேதி முதல் விண்ணப்பம் செய்து வருகின்றன.
மேலும் 2023-24 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பத்தில், என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்கு சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் பாடப்பிரிவு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஆவணத்தில் உள்ளது போல் சமர்பிக்க வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார்கார்டு, உண்மை சான்றிதழ் போன்றவையும் ஆய்வின் போது சமர்பிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும். இந்த நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் கால அவகாசம் வழங்கியதைத் தாெடர்ந்து அண்ணா பல்கலைக் கழகமும் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு ஏப்ரல் 17 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், 24 ந் தேதி வரையில் 50 ஆயிரம் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் 2022-23 ம் கல்வியாண்டில் மத்திய அரசின் கல்வி நிறுவனம் 5, மாநில அரசின் கல்லூரிகள் 11, அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் 3, தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 408, ஆர்க்கிடெச்கர் 31, எம்பிஏ 29, எம்சிஏ 2 என 489 கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது. அவற்றில் 80 கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் குழப்பம்; மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்