சென்னை:அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் நிறைவேற்றப்பட (AIADMK conference in Madurai) உள்ள தீர்மானங்கள் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநாட்டு தீர்மானக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பெஞ்சமின், செம்மலை, பாலகங்கா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில், ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள 'மதுரை மாநாடு' குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வாய்ப்பா?அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதனை தனது இணையதளத்திலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனால், அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளலாம் என அதிமுக சார்பில் நேற்று (ஜூலை11) அறிவிப்பு வெளியானது. இந்த மன்னிப்புக் கடிதம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு பொருந்துமா? என கேள்வி எழுந்தது.
முடிவு எடப்பாடி பழனிசாமி கையில்:இதுகுறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் அது பொருந்தாது. ஆனால், கட்சியில் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். ஓ.பி.எஸ் திமுகவின் கைக்கூலி, இவர் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த என்ன முயற்சி செய்தாலும் முடியாது'' எனக் கூறினார்.
அமைதி இழந்த தமிழ்நாடு:தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எழுச்சியான மாநாடு நடைபெற உள்ளது. அணியாக அணியாக அனைவரும் பங்கேற்று ஆர்ப்பரிக்கும் கூட்டமாக இருக்க வேண்டும் என அண்ணா தொழிற் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை; அமளி பூங்காவாக இருக்கிறது. அமைதியான வாழ்க்கை அதிமுக ஆட்சியில் உறுதிபடுத்தப்பட்டது. தற்போது பெட்ரோல் குண்டு கலாசாரங்கள் தலைதூக்கியுள்ளன.
இரும்புக்கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை பேணுக: 'கொலை கொலையா முந்திரிக்கா' மாதிரி தமிழ்நாட்டில் கொலை கொலையாக நடந்துகொண்டு இருக்கிறது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தி மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்யாமல், எதிர்க்கட்சித்தலைவர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய பிறகு தான், முதலமைச்சர் விழித்து தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி அமைதியை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அந்த கடமையில் இருந்து முதலமைச்சர் பின்வாங்கி விட்டார். தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.