சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று, மிக்ஜாம் புயலாக மாறி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டிவிட்டது. இந்த புயலால் சென்னையில் உள்ள மக்கள் அன்றாட வாழ்வாதாரமும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மிக்ஜாம் புயல் ஆந்திரா வழியாக கரையைக் கடக்க உள்ள நிலையில், தற்போது சென்னையில் புயலின் தாக்கம் குறைந்து, மழையின் அளவும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சென்னை மாநகராட்சி மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து சரிசெய்து வருகின்றனர். இதுவரை சென்னையில் ஏற்பட்ட புயலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் சீர்செய்த பணிகள் குறித்த விரங்கள் வெளியாகியுள்ளது.
சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை: சென்னையில் நேற்று (டிச.4) மாலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை, தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசரத் தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்:புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் மழைநீர் தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:நேற்று காலை கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாறில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர். விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராம், தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.