வாகனங்கள் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. 'பள்ளிக்கூடத்துக்கே பைக்கிருந்தால் தான் போவேன்' என்று சொல்லும் பிள்ளைகள் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம். வாங்கிய சில மாதங்களில் வாகனம் பழசாகிவிட்டது என அதை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் பணக்காரர்களுக்கும், இருசக்கர வாகனம் வாங்க பல ஆண்டுகளாக சிறுகச்சிறுக பணம் சேர்த்து இளைமையை தொலைக்கும் ஏழைகளுக்கு மத்தியில் ஒருவர் சைக்கிளே போதும் என வாழ்ந்துவருகிறார் காவலர் சரவணன்.
சென்னை புனித தோமையார் காவலர் குடியிருப்பில் வசித்துவரும் அவர் நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்துவருகிறார். காவலராக பணியமர்ந்து 23 ஆண்டுகள் கடந்துவிட்டன. வயதும் 51ஐ தாண்டிவிட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அவர் நாள்தோறும் பணிக்கு சைக்கிளில்தான் சென்றுவருகிறார். காவல்பணிக்கும் சைக்கிளைதான் பயன்படுத்துகிறார். அப்படி நாள்தோறும் சென்னையில் 40 கி.மீ. வரை சைக்கிளில் சென்றுவருகிறார்.
இது குறித்து சரவணன் கூறுகையில், "1997ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தேன். சென்னையில் புளியந்தோப்பு, செங்கல்பட்டு, புனித தோமையார் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் தலைமை காவலராக பணிபுரிந்துள்ளேன். எனக்கு அடையாளம் என் சைக்கிள்தான். சென்னையில் உள்ள அனைத்து காவலர்களுக்கும், பெரும்பாலான பொதுமக்களுக்கும் என்னை தெரியும். எங்கு போனாலும் என்னை சைக்கில் சரணன் என அழைப்பார்கள். அதில் என்னை மிகவும் பிடித்தவர்கள் சைக்கிள் ஏட்டையா! சைக்கிள் ஏட்டையா! என அழைப்பாளர்கள்.
என்னுடன் பணியில் சேர்ந்தவர்கள் இருசக்கர, நான்கு வாகனம் என வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நான் சைக்கிளிலிருந்து மாறவேயில்லை. அதனால் பலர் என்னை கிண்டல், கேலி செய்துள்ளனர். நாளடைவில் அவர்களும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து என்னை பாராட்டிவருகின்றனர். ஏனென்றால் சைக்கிள் ஓட்டுவதால் உடல்நலம் சீராகயிருக்கும், அனைத்து தசைகளும் சீராக வேலை செய்யும். இரவில் நிம்மதியாக உறங்களாம்.