சென்னை: சைபர் மோசடி கும்பல் புதுபுது முறைகளில் பொதுமக்களை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளிநாட்டில் இருப்பது போல சைபர் மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் நட்பாகப் பழகி, பின்னர் கிஃப்ட் பார்சல் அனுப்பி இருப்பதாக கூறுகின்றனர்.
பின்னர் சுங்கவரித்துறையில் இருந்து கால் செய்வதாக சம்மந்தப்பட்ட நபரிடம் பேசி, கிஃப்ட் பார்சலில் சட்டவிரோத கரன்சிகள் இருப்பதாகவும் உடனடியாக சுங்க வரித்தொகையை செலுத்த வேண்டும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நைஜீரிய கும்பலை கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த மோசடியை மேலும் மெருகேற்றி தற்போது நூதன முறையில் சைபர் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் 50 லட்ச ரூபாய் வரை மோசடியில் சிக்கி இழந்துள்ளதாக, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
குறிப்பாக மும்பையிலிருந்து சுங்கவரித்துறை அதிகாரிகள் பேசுவது போல பொதுமக்களைத் தொடர்பு கொண்டு, உங்களுக்கு மலேசியாவில் இருந்து பிரபல கொரியர் மூலமாக பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அந்த பார்சலில் சட்டவிரோதமான போதைப்பொருட்கள் மற்றும் புலித்தோல் இருப்பதாகவும் கூறி பயமுறுத்துகின்றனர். பின்னர் இதற்கான அபராதத் தொகையை உடனடியாக செலுத்தவில்லையென்றால் மும்பை போலீசார் 10 நிமிடங்களில் கைது செய்வார்கள் எனக் கூறுகின்றனர்.