தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்னணு பணப்பரிவர்த்தனை மோசடியால் வாடிக்கையாளர்கள் அலைக்கழிப்பு - வேதனைத்தெரிவித்த நீதிபதி - மின்னணு பரிவர்த்தனையில் மோசடி

மின்னணு பணப் பரிவர்த்தனை செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கும் நிலையில், அதில் நடைபெறும் மோசடியால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களால் அலைக்கழிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 12, 2023, 3:47 PM IST

Updated : May 12, 2023, 10:20 PM IST

சென்னை: திருச்சியில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவி ஆர்.பவித்ரா, கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட ஊக்கத்தொகையில் மூன்று லட்சம் ரூபாய், தனது வங்கி கணக்கில் இருந்து PAYTM மூலம் நான்கு பரிவர்த்தனைகளில் திருடப்பட்டதாகக் கூறி, சிட்டி யூனியன் வங்கி மற்றும் சைபர் க்ரைம் காவல் துறையில் புகாரளித்திருந்தார்.

பணத்தை திருப்பித் தர மறுத்து வங்கி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இழந்த பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரியும், அந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பவித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வங்கி தரப்பில், மாணவியின் பணம் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை எனவும், அவரின் பேடிஎம் கணக்கிலிருந்துதான் காணாமல் போனதாகவும், இதற்கு வங்கி எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.

PAYTM நிறுவனம் தரப்பில், தங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பானது எனவும், வாடிக்கையாளருக்கு தெரியாமலோ அல்லது அவர் வங்கி கணக்கு விவரங்களை பகிராமலோ பணப்பரிவர்த்தனை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில், PAYTM மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளில் தலையிடுவதில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மஞ்சுளா, மின்னணு பணப்பரிவர்த்தனைகளை செய்யும்படி, பொதுமக்களை ஊக்குவிக்கும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப்படும்போது வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதாக தனது வேதனையைப் பதிவுசெய்துள்ளார். எந்த தவறும் செய்யாத நிலையில் பணத்தை மாணவி பறிகொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப்பட்டவருக்கு பணத்தைத் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், PAYTM நிறுவனமும் மாறிமாறி பழி போட்டுக்கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என தெரிவித்த நீதிபதி, இரண்டு வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க வேண்டுமென PAYTM நிறுவனத்திற்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : May 12, 2023, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details