சென்னை:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் வழக்கம்போல் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரை நிறுத்தி அவரது உடைமைகளை சோதித்தனர். அப்போது அவரது பையில் ஏதோ லேசாக அசைவதுபோல் தெரிந்தது. இதனையடுத்து அந்த பையைத் திறந்து பாா்த்த சுங்கத்துறையினர், அதனுள் 5 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக அப்பயணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை விலங்குகள். இதை நான் வளர்ப்பதற்காக எடுத்து வந்திருக்கிறேன்’ என கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அந்த விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை.
இவ்வாறு வெளிநாட்டிலிருந்து விலங்குகளை கொண்டு வரும்போது, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். மேலும் இதற்காக சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்குத் துறையிடமும் அனுமதி பெற்று, அதற்கான சான்றிதழ்களும் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.