தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ தங்கும் விடுதியை இடிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதியை இடிக்க வேண்டுமென்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ரேடிசன் ப்ளூ ரிசார்ட் தொடர்ந்த மனுவை, தீர்ப்பாய உத்தரவை மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது.

 ப்ளு ரிசார்ட்
ப்ளு ரிசார்ட்

By

Published : Jun 1, 2021, 6:48 AM IST

மாமல்லபுரத்தில் ரேடிசன் ப்ளூ ரிசார்ட், கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக எழுப்பியுள்ள கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மீனவர் நலச்சங்கத் தலைவர் செல்வராஜ் குமார், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் இல்லாமல், கடலோர மண்டல ஒழுங்குமுறை ஒப்புதல் இல்லாமலும், கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு, கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறாமல், மாமல்லபுரம் கடற்கரையில் ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் 1,100.37 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10 கோடி ரூபாயை இழப்பீடாக, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்குச் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. கட்டடத்தின் ஒரு பகுதியை இடிக்கவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்யவும்கோரி ரிசார்ட் நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், கட்டடத்தின் ஒரு பகுதியை இடிக்கவும், 10 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்ததிலும் தவறில்லை என்றும், தீர்ப்பாய உத்தரவை மறு ஆய்வு செய்யவும் அவசியம் இல்லை எனக்கூறி, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் விதிமுறைகளை ரேடிசன் ப்ளூ தங்குமிட கட்டடத்தை இடிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details