தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடைகள் திறப்பு - அலைமோதும் கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் இன்று (ஜுன்.14) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மது வாங்க கடைகளின் முன் கூட்டம் அலைமோதுகிறது.

டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டநெரிசல்
டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டநெரிசல்

By

Published : Jun 14, 2021, 12:47 PM IST

கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மே 10 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்படுவதால் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவாங்கிச் சென்றனர். கூட்டத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டநெரிசல்

கரோனா தொற்று பாதிப்பால் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்பு கம்பங்கள் அமைக்க வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வட்டம் வரைய வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும் அவை பல இடங்களில் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் மதுப்பிரியர்கள் கரோனாதொற்று விதிகளைப் பற்றி கவலைப்படாமல் கூட்டம் கூட்டமாக நின்று மது வாங்கிச் சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டநெரிசல்

டாஸ்மாக் கடைகள் தொற்று பரவலுக்கு மையப் புள்ளியாக மாறிவிடக் கூடாது என பொதுமக்கள் எச்சரிக்கின்றனர். கடந்த முறை டாஸ்மாக் கடைகள் ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்டபோது காவல்துறையினர் 2 நாட்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை கண்டுகொள்ளாமல் சென்றதைப் போல இந்த முறையும் நடந்துகொள்ளக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டநெரிசல்

டாஸ்மாக் கடைகள் தவிர்த்து காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை டீக்கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைகளில் வைத்து தேனீர் அருந்தக்கூடாது, அதேபோல் பிளாஸ்டிக் பைகளிலும் தேனீரை பார்சல் தரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாத்திரங்களை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில டீக்கடைகளில் மக்கள் தனிமனித இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாக தேனீர் அருந்தினர்.

இவை தவிர, அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மற்ற நிறுவனங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 20 விழுக்காடு பணியாளர்களுடன் அலுவலகத்தில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: பல மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை

ABOUT THE AUTHOR

...view details