பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு சென்னை:அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாவுக்கான இலட்சினையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “எப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அவரது செயல்பாடுகள் மூலம் தனது திறமையை நிரூபித்தவர். நண்பராக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதன்முதலில் திருச்சியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனத் தீர்மானம் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் போடப்பட்டு, தற்போது அனைவருடைய கருத்துகளை ஏற்று ஒருமித்த முடிவோடு அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
சிறியவர், பெரியவர் என யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அவருடைய செயல்பாடுகள் மூலம் தனது திறமையை அவர் நிரூபித்திருக்கிறார்.
எனவே, சரியான நேரத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும், 30 ஆண்டுகள் கழித்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்யும். எனவே, அதை பொருட்படுத்த தேவையில்லை.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுடைய கருத்துகளை அளித்தாலும், தமிழ்நாடு அரசு இறுதியான முடிவை எடுக்கும். தமிழ்நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதுவே தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கையாக அமையும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நண்பர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறை தயாராவதை ஆய்வுசெய்த அமைச்சர் அன்பில்!