சென்னை:விழுப்புரம் நெய்வேலி திருவண்ணாமலை காஞ்சிபுரம், சேலம், திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் ருத்ரா டிரேடிங் என்ற பெயரில் நிறுவனம் இயங்கிவந்தது.
இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டுக்காலம் முடிந்தபின்பும், பணத்தை திருப்பி தராமல் அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவந்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மோசடி செய்ததாக ரித்தன்யா, காமாட்சி வெங்கட், தினேஷ், சங்கர் ஆகிய நால்வர் மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், ருத்ரா டிரேடிங் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு மார்ச்வரை பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில், பணத்தை ஏமாந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தால் நீதிமன்றம் மூலமாக இழந்த பணத்தை பெற்றுத்தர உதவுவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், சென்னை தி.நகரில் சூர்யா எஸ்டேட் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டுவந்தது. இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், முதிர்வு அடைந்த பின்பும் பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் ஏமாற்றிவந்துள்ளது.
இதனால், சூர்யா எஸ்டேட் பைனான்ஸ் நிறுவனம் மீது ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் மோசடிப் புகாரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழங்கினர். இந்தப்புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தி 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ஏமாற்றிய பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சுமார் 1.25 கோடி ரூபாய் பணத்தை ஏமாந்த பொதுமக்களிடம் குற்றப்பிரிவு காவலர்கள் கொடுத்தனர். ஆனால், பாதிக்கப்பட்டோர் பலர் பணத்தை பெற வராமல் இருப்பதாக காவலர்களுக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முதலீட்டு நிறுவனத்தை நம்பி ஏமாந்த 271 பேருக்கு காவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். உரிய ஆவணங்களை கிண்டி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசித்ராவிடம் காண்பித்து இழந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும், 044-22504332 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிறுவனின் உயிரைப் பறித்த ஃப்ரீ ஃபையர் கேம்