சென்னை: 24 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு சிறந்த அணிக்கு மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டல் மூலம் உற்சாகத்தையும், வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளனர். சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆப்கான் வீரர்கள் வலம் வந்து நன்றி தெரிவித்து உள்ளனர்.
இந்த இரண்டு நிகழ்வும் கிரிக்கெட் ரசிகர்களை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தை விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.
"இது தான் டா சென்னை கெத்து, நட்பு தான் எங்க சொத்து, கைகல தூக்கி கத்து" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றது போல் நேற்று (அக். 23) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் போட்டியில், சென்னை ரசிகர்கள் அனைவரும், சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு, எழுந்து நின்று கைகளை தட்டியதுடன் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மேலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை மைதானத்தை சுற்றி வந்து, தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த சம்பவம் உலக கிரிக்கெட் ரசிகர்களிடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி நேற்று (அக். 23) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இறுதியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. முன்னதாக கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை, ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அன்று பாகிஸ்தான்! இன்று ஆப்கானிஸ்தான்:சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்களின் வருகை சிறப்பாகவே இருந்து வருகிறது. அதற்கு நேற்றைய ஆட்டமும் சாட்சி. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி குஜராத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பல மனக்கசப்பான சம்பவங்கள் நிகந்தாலும், சென்னையில், பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.