இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணை நிலை ஆளுநரை பயன்படுத்தி கடந்த நான்கரை ஆண்டுகளாக முடக்கம் செய்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலைமையை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வந்தது. புதுச்சேரியில் பாஜகவின் நியமனச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடிக்கக் கீழ்த்தரமான, சட்டவிரோதச் செயலில் பாஜக இறங்கியிருக்கிறது.
ஆட்சி முடிவுறும் நிலையில் தனது அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி சில சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அரசியல் அலங்கோலத்தை அரங்கேற்றியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 22ஆம் தேதி காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
அதற்குள்ளாக மேலும் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அவர்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து புதுச்சேரியில் பாஜக நிறைவேற்றியுள்ள ஜனநாயகப் படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதைத்தான் பாஜக கட்சி கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர் அருணாச்சல பிரதேசம், ஆகிய மாநிலங்களில் செய்தது. தற்போது புதுச்சேரியிலும் செய்துவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட அனுமதிக்காததும், கவிழ்ப்பதும் பாஜகவின் கைவந்த கலையாக உள்ளது என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
பாஜகவின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயல்களுக்கும் இதற்கு துணைபோகும் மற்றும் விலைபோகும் கட்சிமாறிகளையும், அரசியல் வியாபாரிகளையும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் புறக்கணித்து புதுச்சேரி மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது" எனக் கூறியுள்ளார்.