சென்னை: மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. இவ்வியக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது, முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 01) அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர்.