தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலை! மா.கம்யூ கண்டனம் - சிபிஎம்(ஐ)

சென்னை: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக படுகொலையை பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது என்றும், மாநில உரிமைகள் மீது மத்திய பாஜக அரசு நடத்திய தாக்குதலின் ஒரு பகுதிதான் காஷ்மீர் விவகாரம் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில்

By

Published : Aug 5, 2019, 7:20 PM IST

இன்று நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளதோடு, இம்மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவையும் மத்திய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களின் மாநில உரிமையை அபகரிக்கும் செயல், அதேபோல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல். இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தனிப்பிரதேசமாக இருந்த காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைவது குறித்து முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மக்களின் தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனம் 370 உள்ளிட்ட பிரிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தமாக நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில காஷ்மீர் மாநிலம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை புறக்கணித்து மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370இன் படி வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதும், இம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து பாஜக அரசு ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது.

மாநில உரிமைகள் மீது பாஜக அரசு நடத்திவரும் தாக்குதல்தான் காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் என மத்திய பாஜக அரசின் தாக்குதலை அனைவரும் எதிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details