சென்னை:தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த ஆண்டு டிச.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புரட்டி போட்டது மிக்ஜாம் புயல். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த வகையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையினை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினார். இந்த புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடி வழங்க மறுத்து வருவதால், இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (ஜன.3) சாஸ்திரி பவனில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "இத்தகைய பேரிடரை மத்திய அமைச்சர்கள் பார்வையிட்டு, மத்தியக்குழு ஆய்வு செய்து பல நாட்களாகிறது. ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டுமென்று, முதலமைச்சர் தொடர்ந்து கோரி வருகிறார். அதை பிரதமர் பரிசீலிப்பதாகத் தெரியவில்லை. திருச்சிக்கு வந்த பிரதமர், ஏற்கனவே ஏராளமான நிதி கொடுத்ததாக கூறியுள்ளார்.
அதாவது, தற்போது நிதி கொடுக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொல்கிறார். மாநில அரசு கோரிய நிதியில், குறைந்தபட்சம் ஒரு 2 ஆயிரம் கோடி ரூபாயைக் கூட கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர் தேவைதானா? தமிழகத்திற்கு விரோதமான, வஞ்சிக்கிற, மக்களுக்கு துரோகம் செய்கிற மத்திய அரசைக் கண்டிக்கிறோம். இதற்கு பிறகும் மத்திய அரசு நிதியை ஒதுக்கவில்லையென்றால், அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:'தேங்கிய கழிவுகளை மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்' - கரூர் மேயரின் பேச்சால் அதிருப்தி