இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை வகுப்புவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும், பெண்கள் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணித்த தந்தை பெரியார் அவர்களின் சிலை வகுப்புவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நாளிதழின் வார இதழில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சுட வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் திருச்சியில் கலந்துகொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சோடா பாட்டில்கள் வீசப்பட்டன. கூட்டத்தில் பேசிவிட்டு திரும்பும் பொழுது கி.வீரமணி வாகனத்தின் முன்பு கலவரத்தில் இந்துத்துவா சக்திகள் ஈடுபட்டன. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதை உறுதிசெய்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.