சென்னை:சீனாவின் உகான் மாநகரில் கண்டறியப்பட்ட கரோனா என்னும் கொடிய வைரஸ் 2 ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்தது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் கட்டுப்படாத கரோனா கடைசியாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 636 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகப் பதிவாகியுள்ளது. இதிலும் குறிப்பாக கோவிட்-19 துணை மாறுபாடு JN.1 வைரஸ்ஸிற்கு இந்தியா முழுவதும் 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டும் கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் 841 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 227 நாட்களுக்குப் பின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 4309 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனையடுத்து பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக் கவசம் அணியவும், பாதுகாப்பாக இருக்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.