தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக இன்று (ஜனவரி 2) 1,594 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (ஜனவரி 1) தொற்றினால் 1,489 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நாளில் 100 பேருக்குப் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 20 ஆயிரத்து 944 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 682 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாள்களில் அதிகரித்து வந்த பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கையில் 3.3 சதவீதமாகவுள்ளது.
மேலும் புதிதாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 29 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 1,575 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த 6 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த 2 நபர்களுக்கும், கனடாவிலிருந்து வந்த ஒருவருக்கும், லண்டனிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், பீகார் மாநிலம் மற்றும் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 1,594 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.