தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! - Gambling on IPL cricket match

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

By

Published : Nov 11, 2022, 8:51 PM IST

சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக்கூறி 100 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ள கருத்துகள், நீதிமன்றங்களை களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித்துறை மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியைப்பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தோனி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 9-ம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:Rajiv Gandhi murder case: நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details