சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி முருகன் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், என்எல்சி-க்காக கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் தோண்டும் பணிக்காக புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், பயிர்கள் சேதமடைகின்றன. ஆகையால், அறுவடை வரை விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும், நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க கோரியும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (ஆக.02) மீண்டும் விசாரணைக்கு வந்தது. நேற்று முன் தினம் (ஜூலை 31) பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழ்நாடு அரசும், என்எல்சி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப்போவதில்லை. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். மேலும், சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
என்எல்சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நெற்பயிர் சேதப்படுத்தப்பட்டதால் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 53 பேருக்கான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், சிறப்பு தாசில்தாரரிடம் இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, நிலம் கையகப்படுத்தும்போது வழங்குவதாக கூறிய இழப்பீடான ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாயை முழுமையாக வழங்காமல் பயிர்களை சேதம் செய்துள்ளதாகவும், தற்போது சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீடு போதுமானதல்ல எனவும், ஒரு மூட்டைக்கு ஆயிரத்து 350 ரூபாய் என வைத்தால், ஏக்கருக்கு 81ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.