சென்னை:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை மண்டலத்தில் நடத்துநராக பணியாற்றி வருபவர் ஏ.பிரபாகரன். இவர், 2010ஆம் ஆண்டு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளரிடம் டிக்கெட் பண்டலை வாங்கி வந்து, ஓட்டுநர் இருக்கையின் இடது புறத்தில் வைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பண்டல் மாயமான நிலையில் உடனடியாக போக்குவரத்து கழக நிர்வாகத்தில் புகார் செய்தார். ஆனால், டிக்கெட் பண்டலின் தொகையான 36 ஆயிரத்து 103 ரூபாயை சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய 2010ஆம் ஆண்டு நவம்பரில் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு, ஒவ்வொரு மாதமும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பிடித்தம் செய்தது.
இதை எதிர்த்து பிரபாகரன் தாக்கல் செய்து இருந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஓய்.ஜார்ஜ் வில்லியம் ஆஜராகி, நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களின் பொருட்களை வைப்பதற்கு எந்த லாக்கர் வசதியும் பேருந்துகளில் செய்து தரப்படவில்லை என்றும், தொலைந்து போகும் டிக்கெட்டுகளுக்கு நடத்துநரிடம் இருந்து சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்கிற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.