சென்னை:குத்தகை நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் திருப்பி வழங்க வேண்டும் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி பால தண்டாயுதபாணி கோயிலுக்கு, கடந்த 1863ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இங்கிலாந்து மகாராணியால், தாராபுரம் தாலுகா, பெரியகுமாரபாளையம் கிராமத்தில் உள்ள 60 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.
இந்த நிலம் ஸ்ரீரங்க கவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விடப்பட்டது. பின்னர், 1960ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் திருப்பி எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்ரீரங்க கவுண்டரும், ராமசாமி கவுண்டரும் ஈரோடு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலத்தின் மீது பழநி பாலதண்டாயுதபாணி கோவில் தேவஸ்தானத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும், ஸ்ரீரங்க கவுண்டர் மற்றும் ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு உரிமை இல்லை என்றும் தீர்ப்பளித்தது.