சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து, செப்டம்பர் 20ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.