தமிழ்நாடு

tamil nadu

யூகலிப்டஸ் மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை: ஊட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அமைக்க ஏதுவாக வனப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரத்து 838 அயல்நாட்டு (யூகலிப்டஸ்) மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

By

Published : Nov 18, 2020, 7:21 PM IST

Published : Nov 18, 2020, 7:21 PM IST

யூகலிப்டஸ் மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் அனுமதி!
யூகலிப்டஸ் மரங்களை வெட்ட உயர் நீதிமன்றம் அனுமதி!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 1967ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக, தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம் காப்புக் காடுகள் பகுதியிலிருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து அதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அந்த இடத்தில் 25 ஏக்கர் அளவில் ஊட்டி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு விட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிலத்தை கையகப்படுத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், ஊட்டியில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உள்பட்டது எனவும், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் உத்தரவிட்டது.

இதற்கிடையில், வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டுமானங்களையே மருத்துவக் கல்லூரிக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (நவ. 18) நீதிபதிகள் எம். சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண் மற்றும் வனத்துறைக்கான சிறப்பு அரசு பிளீடர் விஜய் பிரசாந்த் ஆகியோர், மருத்துவக் கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கர் இடத்திலுள்ள மரங்களை மட்டுமே வெட்டப்பட உள்ளதாகவும், அந்த 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை எனவும், அயல்நாட்டு மரங்களே இருப்பதாகவும் குறிப்பாக அதில் உள்ள ஆயிரத்து 838 மரங்களில் 90% தைலமரமே (Eucalyptus) உள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

மரங்களை வெட்ட மத்திய வனத்துறையிடமும், தமிழ்நாடு அரசிடமும் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், மருத்துவக் கல்லூரிக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு சார்பில் மரங்களை நடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசின் விளக்கத்தை பதிவு செய்துகொண்டு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், விஞ்ஞான முறையில் மரங்கள் வெட்டப்பட வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே மரத்தினை ஏலம் விட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். தொடர்ந்து மரங்களை வெட்டியது தொடர்பான புகைப்பட விவரங்களோடு அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details