சென்னை:தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "இன்று மதியம் மூன்று மணிக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன் இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோருடன் வாக்கு எண்ணிக்கை குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆனால், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகள்வரை அமைத்து வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். மே 2ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகப் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கின்றன. எந்தத் தவறும் இதுவரை இதில் நடக்கவில்லை. அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று முழு ஊரடங்கு தொடர்ந்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். வாக்குப் பதிவு இயந்திரங்களை வைஃபை உள்ளிட்ட வெளிப்புறத் தகவல் தொடர்புகள் மூலமாக கட்டுப்படுத்த முடியாது. முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. 234 பொதுப் பார்வையாளர்கள் 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள், இதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஒரு பொதுப் பார்வையாளர் ஈடுபடுவார். இவர்கள் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி தமிழ்நாடு வருவார்கள்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகே பெண் காவலர்களுக்காக கழிவறை வாகனம் மட்டும் சரக்கு பெட்டக லாரியில் வந்துள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ’ஸ்ட்ராங் ரூம்’ அருகே ஏதேனும் வாகனங்கள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர்கள்மனு