சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போதும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், பகுதிகள் மற்றும் மண்டலங்களிலுள்ள பிரச்சினைகள் குறித்தும் அவற்றைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர்.
மறுவாழ்வு மையம்:98வது வார்டு சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினி, "பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கப்படுகிறது. அவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க, மாணவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும்" என்று கோரிக்கை முன் வைத்தார்.
கோரிக்கைகள்: மாநகராட்சி மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆயாக்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. அவர்கள் 500 பேருக்கும் ஊதிய உயர்வுடன், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தான் மெட்ரோ வாட்டர் குழாயில் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், புழல் ஏரி நிரம்பி இருந்தும் அதில் இருந்து சப்ளை செய்யப்பட்டு வந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டதாகவும், பல்வேறு இடங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் இதற்கு உடணடியாக தீர்வு காண வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களிலும் புதிதாக பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க:சர்வேயருக்கு எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்..? அரசுக்கு கடிதம் எழுதிய ஆர்டிஐ ஆர்வலர் - வீடியோ வைரல்!