கரோனா வைரஸின் தொற்றின் தாக்கம் சென்னையில் அதிகமாகிவருகிறது. நாளுக்குநாள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில், கரோனா வார்டில் இருக்கும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், சிகிச்சையளிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாநகராட்சி முடிவெடுத்தது.
அந்தவரிசையில், திருமண மண்டபங்களும் சேர்ந்துவிட்டது. அதன்படி, 15 மண்டலங்களிலும் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என, திருமண மண்டப உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர்களை தங்க வைத்து தொடர் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் இருக்கைகள் தயாராகவுள்ளன.
இந்நிலையில், நோய்த்தொற்று அதிகமாகிக் கொண்டேயிருப்பதால் தற்போது திருமணம் மண்டபங்களையும் தயாராக வைத்திருப்போம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நான்காயிரம் படுக்கைகள் தயாராக உள்ள நிலையில், அடுத்த வாரம் 10,000 படுக்கைகள், ஒரு மாதத்துக்குள் 50, 000 படுக்கைகள் தயாரித்து விடுவோம் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!