தமிழ்நாட்டில் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்கிறது.
நேற்று மட்டும் சென்னையில் கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் தவிர அங்கு யாரும் நுழையக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது மாநகரில் 420 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.