தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்19 தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு தோள் கொடுக்கும் மாற்றுத்திறனாளிகள்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் விதமாக முகக் கவசங்களை தயார் செய்து சென்னை மாநகராட்சியின் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வரும் மாற்றுத்திறனாளி பெண்கள் குறித்த செய்தி தொகுப்பு இதோ...

By

Published : Mar 30, 2020, 4:17 PM IST

corona virus prevention program differently abled people helps government
கோவிட்19 தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு தோள் கொடுக்கும் மாற்றுத்திறனாளிகள்!

உலகளவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கோவிட்-19 வைரஸின் தாக்கம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. வேகமாக பரவி வரும் இந்த தொற்றுநோயைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேகப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு அரசால் 144 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் - காவல்துறை அலுவலர்கள் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் விதமாக தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற வகைகளில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உறுதுணையாக பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக, சென்னை மாநகராட்சி கீழ் செயல்படும் பெண்கள் காப்பகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள், பொதுநலன் கருதி தங்களுக்கு தெரிந்த தையல் கலை மூலமாக பங்காற்றி வருகிறார்.

ஆதரவற்றப் பெண்களை அரவணைத்து வாழ்விடம் அளிக்கும் இந்த காப்பகத்தில் வாழ்ந்து வருகிற மாற்றுத்திறனாளி பெண்கள், ஊடரங்கை பொது நலனுக்கான நேரமாக மாற்றி இருக்கின்றார்கள்.

சாந்தி, மணிமேகலை, ராஜேஸ்வரி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு முகமூடி, கையுறைகளை தயாரிக்கும் பயனுள்ள பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

கோவிட்19 தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு தோள் கொடுக்கும் மாற்றுத்திறனாளிகள்!

தினம்தோறும் இவர்கள் தைத்து தரும் முகமூடிகள் அனைத்தும் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பின், தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக அந்த காப்பகத்தின் இயக்குநர் டாக்டர். ஐஸ்வர்யா ராவ் கூறுகையில், “தற்போது 55 மாற்றுத் திறனாளி பெண்கள் உள்ளனர். இவர்கள் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு தினம்தோறும் இலவசமாக 300 முகமூடிகளை தைத்து வழங்கிவருகின்றனர். மேலும் எங்களுக்கு நவீன தையல் இயந்திரங்கள் இருந்தால் இன்னும் அதிகமான (சுமார் 2000) முகமூடிகளை தைத்து தரமுடியும்” என்று அதன் கூறினார்.

முகமூடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் பற்றாக்குறையை சமாளிக்க தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் எனக்கூறி முகக் கவசங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் இவர்களை பார்த்தாவது, 144 தடையால் பொழுதுபோக்க முடியாமல் திணறுவதாக சமூகவலைத்தளங்களில் பதிவிடுவோர், தங்களது நேரத்தை மண்ணுக்கும் மக்களுக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க :‘சிட்டுக்குருவி’ குறித்து 'நம்மாழ்வார்' சொன்ன சீன கதை!

ABOUT THE AUTHOR

...view details