கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நரம்பியல் நிபுணர் சைமன் ஹெர்குலிஸ் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அலுவலர்களை அங்கிருந்து துரத்தியதாகவும் 10க்கும் மேற்பட்டோர் மீது டிபி சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்வேந்தன், அப்பு, மோகன், ஜெயமணி, ஜெயபிரதா, ஜெனிதா, மாரியம்மாள், சரஸ்வதி, கிருஷ்ணவேணி, தினேஷ், மஞ்சுளா, பத்மபிரியா ஆகிய 12 பேரும் தங்களுக்குப் பிணை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (மே23) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அடக்கம் செய்யப் போவதாக தகவல் வந்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உடலை எடுத்துச் சென்றபின் தாங்கள் கலைந்து சென்றுவிட்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தங்களைத் தவறுதலாக கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதாகக் கூறி பிணை வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.