சென்னை:பொதுமக்களின் நலன்கருதி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி (COVID-19 vaccine) செலுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 விழுக்காட்டினர் தகுதிவாய்ந்த நபர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
'கரோனா தடுப்பூசி மருந்தே, கரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம்' என்பதைக் கருத்திற்கொண்டு தகுதிவாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவரவர் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு நாள் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.
மேலும், இதர நாள்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களிலும் கரோனா தடுப்பூசிகள்(COVID-19 vaccine) செலுத்தப்பட்டுவருகின்றன.
தகுதிவாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு சிறப்புத் தடுப்பூசி முகாமிற்குப் பதிலாக, வாரம்தோறும் இரண்டு சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. தகுதிவாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும் நோக்கில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெருவாரியாகவும், வார்டுவாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.