சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல கள ஒருங்கிணைப்புக் குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நேற்று (11.05.2021) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் காவல் துறைத் தலைவர் எச்.எம். ஜெயராம், இணை ஆணையாளர் (கல்வி) சங்கர்லால் குமாவாத், மத்திய வட்டார இணை ஆணையாளர் பி.என்.ஶ்ரீதர், துணை ஆணையாளர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், (சுகாதாரம்), ஜெ.மேகநாத ரெட்டி, (வருவாய் (ம) நிதி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதாவது, ’ஒவ்வொரு மண்டலத்திலும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் தடவல் பரிசோதனை (RT-PCR) மேற்கொண்டு சோதனை முடிவு வருவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட நபருக்கு ஜிங்க், விட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள் அடங்கிய மருத்துவ தொகுப்பு (Basic Medicine Kit) வழங்க வேண்டும்.
சென்னையில் 59 ஆய்வகங்கள் உள்ளன. பரிசோதனை முடிவுகள் வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், இனிவரும் காலங்களில் அனைத்து ஆய்வகங்களும் தொற்று பரிசோதனை மேற்கொண்ட நபர்களின் முடிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையிடம் வழங்க வேண்டும்.
பரிசோதனை முடிவுகளைப் பெற ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மருத்துவக் குழுவின் வாயிலாக மட்டுமே பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
பரிசோதனை முடிவுகளைப் பெற ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மருத்துவக் குழுவின் வாயிலாக மட்டுமே பரிசோதனை முடிவுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு தொற்று பாதித்த நபர்களின் வயது, உடல் சார்ந்த இணை நோய்கள், சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவு போன்ற பல்வேறு முதற்கட்ட சோதனைகளை மருத்துவர்களின் மேற்பார்வையில் மாநகராட்சி சுகாதாரக் குழுவானது, அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து தொற்று பாதிப்பு குறைந்த அளவே இருப்பின், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் (Tele Medicine) மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனநல ஆலோசனைகள் வழங்க ஒரு மண்டலத்திற்கு 6 நபர்கள் என சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும். 15 மண்டலங்களுக்கும் மருத்துவம் முடித்த பயிற்சி மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும்.
தற்போது கரோனா தொற்றால் பாதித்த நபர்களுக்கு ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதால், அனைத்து கரோனா பாதுகாப்பு மையங்களும் படிப்படியாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை ஆரம்ப நிலை சுகாதார மையமாக மாற்றவும், அங்கு சிகிச்சைகளை கண்காணிக்க போதிய அளவு எண்ணிக்கையிலான மருத்துவ அலுவலர்களையும் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.