நாடு முழுவதும் தற்போது கரோனாவின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவழிவதோடு, அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்றானது வேகமாகப் பரவிவருவதால் அங்குள்ள தனியாா், அரசு மருத்துவமனைகளில் கட்டில் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்து மருத்துவமனையில் அனுமதித்தாலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உள்ளது.
தற்போது அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிப்படைந்த தொழிலதிபர்கள் தனி விமானம் மூலம் வேறு மாநிலங்களுக்குச் சென்று தங்களுக்கு வசதியான மருத்துவமனைகளில் சென்று சிகிச்சைப் பெறுகின்றனா்.
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் அங்குள்ள மருத்துவமனைகளில் போதிய இடவசதியில்லாததால், தனி விமானம் மூலம் அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடிவுசெய்தனர் அவரது குடும்பத்தினர்.
அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பிரபலமான தனியாா் மருத்துவமனையை (MGM HEALTH CARE) அவர்கள் தொடா்புகொண்டனா். தற்போது அந்த மருத்துவமனையும் அவருக்கு சிகிச்சை அளிப்பதாக உறுதியளித்தது.
இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபா், அவருடைய குடும்பத்தினா் நான்கு பேருடன் தனி விமானத்தில் சூரத்திலிருந்து புறப்பட்டு இன்று (ஏப்ரல் 24) பகல் 12 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்துசோ்ந்தனர். மேலும் அந்தத் தனியாா் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று சிறப்பு அனுமதி பெற்று, சென்னை பழைய விமான நிலையத்தில் தயாா் நிலையில் நின்றது.
பின்னர் விமானத்திலிருந்து வந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு, கேட் எண் 6 வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னர் ஜிஎஸ்டி சாலை வழியாக நுங்கம்பாக்கம் தனியாா் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றது.