போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு தங்கியிருந்த 85 வயது மூதாட்டிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து அந்த மூதாட்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதியோர் இல்லத்தில் ஒரு மூதாட்டிக்கு கரோனா தொற்று அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த மூதாட்டி மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வளசரவாக்கம் மண்டல அலுவலர்கள் அந்தப் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து கிருமி நாசினிகள் தெளித்து வருகின்றனர். மேலும் இந்த முதியோர் இல்லத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தும் பணியிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அருகில் இருந்த மற்றொரு மூதாட்டியை பார்க்க அவர்கள் உறவினர்கள் வந்து சென்றதாகவும் அதன் பிறகு அந்த மூதாட்டிக்கு கரோனா தொற்று பரவி உள்ளதா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு இருக்கும் மற்ற முதியவர்களுக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. முதியோர் இல்லத்தில் உள்ள மூதாட்டிக்கு கரோனா தொற்று பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஒன்றரை வயது மகனைப் பிரிந்து, காவல் பணி செய்யும் பெண் சிங்கம்!