சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாகப் பரவிவருகிறது. முதல் அலையின்போது சுமார் ஏழு மாதங்கள் வரை தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. அதன்பின் படிப்படியாக நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் தளர்வுகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா குறித்த பயத்தைக் கைவிட்டு தேர்தல் பரப்புரை, திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் கூடியதாலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றாத காரணத்தினாலும் மீண்டும் தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது இரண்டாம் அலை அதிகரித்துவருகிறது.
மீண்டும் சென்னையை அச்சுறுத்தும் கரோனா
குறிப்பாக சென்னையில் தொற்று அதி தீவிரமாகப் பரவிவருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
சென்னையில் மொத்தம் இரண்டு லட்சத்து 67 ஆயிரத்து 181 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 751 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், நான்காயிரத்து 332 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
இந்தத் தீவிர பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. ஏற்கனவே கரோனா அதிகரித்த சமயத்தில் 12 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு வீடு வீடாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
இதில் கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் குறைந்துவந்த நோய்த்தொற்று, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வீடு வீடாகச் சென்று மீண்டும் கரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள்
மேலும், மருத்துவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டும் வருகின்றன. அதன்படி, ஒரு தெருவில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அப்பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துவருகின்றனர். அந்த வகையில், இதுவரையிலும் ஆயிரத்து 120 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய ஆயிரம் நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரம் நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கரோனா நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் நமது ஈடிவி பாரத் ஊடகத்துடன் பேசியது பின்வருமாறு:
"கடந்த ஆண்டு எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதோ அந்த நடவடிக்கையை மீண்டும் எடுக்கவுள்ளோம். வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்று உள்ளதா என்பன குறித்து தினமும் பரிசோதிக்க உள்ளோம். கடந்த ஆண்டைப் போலவே இதற்காக 12 ஆயிரம் களப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த உள்ளோம். ஆறாயிரம் களப்பணியாளர்கள் ஏற்கனவே பணிக்கு எடுக்கப்பட்டு, அவர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்துவருகின்றனர்.
கரோனா பணிகளில் தன்னார்வலர்கள்
வரும் திங்கள்கிழமை (ஏப்.19) முதல் மீதமுள்ள ஆறாயிரம் களப்பணியாளர்களும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். தற்சமயம் வீடுகளில் கரோனா பாதிக்கப்பட்டு அல்லது சிறு அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பணிகளைச் செய்வதற்காக ஆயிரம் தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வரும் திங்கள்கிழமை முதல் இந்த எண்ணிக்கையை இரண்டாயிரமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்த சென்னை மாநகராட்சித் துணை ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் தெருக்கள் வாரியான மருத்துவ முகாம் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது நோய்த்தொற்று அதிகமிருக்கும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. அதை 300ஆக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குத் தேவையான மருத்துவர்களையும் பணிக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்
மேலும் சென்னையில் 11 இடங்களில் 11 ஆயிரத்து 755 படுக்கைகள் தயார்செய்யப்பட்டுள்ளன. சிறு அறிகுறிகள் உள்ள நபர்களை கரோனா நல மையங்களில் தங்கவைக்கவுள்ளோம். அனைத்து வகையான ஸ்கேனிங், பரிசோதனைகளையும் செய்வதற்கு 12 கோவிட் ஸ்கிரீனிங் மையங்கள் தொடங்கவுள்ளோம்.
மாநகராட்சி அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. மக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் நபர்கள் ஒரு நாளைக்கு சென்னையில் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:எங்க அய்யா அம்பேத்கருக்கு நீ என்ன... விரட்டியடிக்கப்பட்ட பாஜகவினர்!