சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு செல்லும் நிலை குறித்து கூறியுள்ள தகவலில், ”தேசியளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இன்று காலை 5233 என பதிவாகியுள்ளது. இந்த தொற்று பாதிப்பு நேற்று 3714 என இருந்தது. ஒரே நாளில் 41% நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து கேரளாவில் 2771 நபர்களுக்கும், மகாராஷ்டிராவில் 1881 நபர்களுக்கும், மும்பையில் 1242 நபர்களுக்கும், டெல்லியில் 450 நபர்களுக்கும், கர்நாடகாவில் 348 நபர்களுக்கும், பெங்களூரில் 339 நபர்களுக்கும் நேற்று(ஜூன் 7) பதிவாகியிருந்தது.
இந்த மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பறவைகளிடம் குறைவாகவே இருக்கிறது. இருந்தாலும் கடந்த இரண்டு நாட்களாக வரக்கூடிய தகவலின் அடிப்படையில் நோய்த்தொற்று பரவல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து 200 அல்லது அதற்குமேல் வரக்கூடிய நாட்களில் நோய் பரவல் வீதம் பதிவு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கல்வி நிறுவனத்தில் 245 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 29 மாணவர்களுக்கு நேற்று(ஜூன் 7) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் வரக்கூடிய புள்ளிவிவரங்களைத் தீர ஆய்வு செய்ததில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினமும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகிறது.
மேலும், 12 மாவட்டங்களில் அவ்வப்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த வகை வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து மரபணுப் பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.