தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா 2.0: 'பாதுகாப்பாகவும், பக்கபலமாகவும் நிற்போம்' - Corona 2.0

கரோனா இரண்டாம் அலையின் போது மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், தேவை ஏற்படுபவர்களுக்கு பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் அவரது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Corona 2.0: Lets stand safe and strong for people said dmk chief stalin
Corona 2.0: Lets stand safe and strong for people said dmk chief stalin

By

Published : Apr 23, 2021, 4:22 PM IST

சென்னை:கரோனா இரண்டாம் அலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "கரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது. ஒரு நாளில் நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு மேல் உள்ளது.

நோய்த் தொற்றால் மரணம் அமடைகிறவர்களின் எண்ணிக்கை கவலையையும், வேதனையையும் அளிக்கிறது. மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் சேவை போற்றுதலுக்குரியது.

அவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்குப் போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் முதல் தமிழ்நாட்டின் வேலூர் வரை பலர் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சைப் பிளக்கிறது.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் எனப் பல மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன. கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பூசிகள் மே 1ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை முதல் தவணை ஊசி போடச் சென்றவர்களும், இரண்டாவது தவணை ஊசிக்கான காலக்கெடு நெருங்கியவர்களும் வேதனையோடு குறிப்பிடுவதை ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் காண முடிகிறது.

இந்நிலையில், தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியிருப்பது மாநிலங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள பெரும் சுமையாகும். இந்தச் சுமை, மக்களைத்தான் பாதிக்கும்.

அவர்களின் அச்ச உணர்வை அதிகரித்தால் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு, நோயைவிட அதிகப் பாதிப்பு ஏற்பட்டு விடும். இரண்டாவது தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட உங்களில் ஒருவனான நான், அதுகுறித்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்.

அதுபோலவே, மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் திமுக முன்னின்று மேற்கொண்டு வருகிறது. இன்று (ஏப்.23) கொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம் மற்றும் திரு.வி.க. நகர் தொகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கியும், முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கியும் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் சேர்வதைத் தவிர்த்தல், பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் இவைதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளாகும்.

நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, திமுக நிர்வாகிகளும், வேட்பாளர்களும், செயல்வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு உதவிடும் பணியில் களமிறங்கிச் செயலாற்றி வருகிறீர்கள். இரண்டாவது அலையின் உயிர்ப்பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நம் கழகத்தைச் சேர்ந்தவர்களும் மரணமடைகிற வேதனைச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிற உயிர்களைப் போலத் தன்னுயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும், இந்தப் பேரிடர் சூழலில் இன்றியமையாததாகும். முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை. தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.

அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும், கழகத்தினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மே 2-க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details