தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் மர்ம மரணங்கள்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - தீர்வு என்ன?

தமிழகத்தில் மர்ம மரண சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கான காரணங்களும், தீர்வுகளும் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தொடரும் மர்ம மரணங்கள்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - தீர்வு என்ன?
தொடரும் மர்ம மரணங்கள்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - தீர்வு என்ன?

By

Published : Aug 2, 2022, 11:31 AM IST

Updated : Aug 2, 2022, 7:10 PM IST

சென்னை:கடந்த 2021 ஆம் ஆண்டு விசாரணை கைதியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட முத்து மனோ என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், நீதி விசாரணை கேட்டு உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கையை அடுத்து, 71 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நுங்கம்பாக்கம் மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் மின்சார வயர்களை கடித்து உயரிழந்ததாக சொல்லப்பட்டது. இந்த சுவாதி கொலை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இன்றும் தீர்க்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் கூறி அவரது தந்தை உடலை வாங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

அடுத்தடுத்த வழக்குகள்: மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் காப்பர் உருக்கு ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையும் மற்றும் இழப்பீடும் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், உடல்களை வாங்க உறவினர்கள் முன்வந்தனர்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஶ்ரீமதி உயரிழப்பிலும் மாணவியின் உடலைப் பெற மறுத்த பெற்றோர், நீதி விசாரணை நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்த பின்னர் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றத்தின் இறுதி எச்சரிக்கையை அடுத்து உடலை வாங்கிக்கொண்டனர்.

தற்போது, திருவள்ளூரில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். லாக்கப் மரணங்கள், மாணாக்கர்கள் தற்கொலைகளில் சந்தேகங்கள் ஏற்படும் போது, உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுப்பது ஏன்? என்ற கேள்வி அனைவரிடமும் எழாமல் இல்லை.

இதற்கான காரணம் என்ன? என சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேனிடம் கேட்டபோது, “கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் சுதந்திரப்பறவைகளாக விடப்பட்டனர். தற்போது, கரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் நேரடி வகுப்புகளை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர்.

வியாபார கல்வியின் அழுத்தம்: ஒரு சிலருக்கு வரமான ஆன்லைன் வகுப்புகள், பெரும்பாலான மாணவர்களுக்கு சாபமாக அமைந்து விட்டது. நேரடி வகுப்புகளுக்கு மாணாக்கர்கள் தயார் இல்லாத சூழ்நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் தற்கொலை என்ற முடிவுக்கு அவர்களை தள்ளுகிறது. கல்வி என்ற வியாபாரத்தில் முதலிடத்தை பிடிக்க, மாணவர்களை பந்தய குதிரைகளாக்க ஆசிரியர்களுக்கு கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.

இதனால் மாணவர்களுக்கு அழுத்தம் தர வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. தரமான கல்வியையும், நிறுவனத்தையும் தேடும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரமானவர்களா? அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்ற நற்சான்றிதழை கேட்க மறந்து விடுகின்றனர்.

தரமான கல்வி, தரமான விடுதி என தங்களை விளம்பரப்படுத்தும் கல்வி நிறுவனங்களை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விடுகின்றன. ஒரு சில நிறுவனங்களை தவிர பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் ஆலோசனை மையங்களை அமைப்பதில்லை. மாணவர்களின் தற்கொலைக்கு கல்வி நிறுவனமும், அந்த சூழ்நிலைக்கு அவர்களை தள்ளும் ஆசிரியர்களையும், பெற்றோர்களுமே முழு பொறுப்பு.

லாக்கப் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரேத பரிசோதனை குறிப்பிட்ட மருத்துவர்களை கொண்டு நடத்த வேண்டும். வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதுபோல கல்வி நிறுவனங்களில் ஏற்படும் மாணாக்கர்களின் மரணங்களிலும் விசாரணை நடைபெற்றால், பெற்றோர்களும், உறவினர்களும் உடலை வாங்க மறுக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் ஏற்படும் மரணங்களில் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்” என கூறினார்.

அலுவலர்களின் அலட்சியம்: அதேபோல், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்திரசேகரன், “கல்வி நிறுவனங்களில் ஏற்படும் மாணாக்கர்களின் மரணங்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெரும்பாலான மரணங்களில் காவல்துறை உரிய நேரத்தில் விசாரணை நடத்தப்படாததே பெற்றோரும், உறவினர்களும் போராட்டம் நடத்த காரணமாக உள்ளது.

மரணமடையும் மாணாக்கர்களின் உடலை தகுந்த மருத்துவர்களும், தடயவியல் துறையும் சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்தால் மர்ம மரணம் என்ற சந்தேகம் ஏற்படாது. அலுவலர்களின் அலட்சியமே கலவரங்களாக வெடிக்க காரணமாக உள்ளது. நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளில் ஆவணங்கள் சரியாக உள்ளதா? விசாரணை சரியாக நடக்கிறதா? என்பதை மட்டுமே முடிவு செய்யும்.

சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அது நீதிமன்றங்களின் கடமையும் அல்ல. உடனடி தீர்வு போல, உடனடி தீர்ப்பையும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் எதிர்பார்க்க முடியாது. சரியான விசாரணையை சரியான நேரத்தில் தொடங்காத அலுவலர்களின் அலட்சியங்களே போராட்டங்களும், கலவரங்களும் நடக்க காரணமாக உள்ளது.

சந்தேக மரணங்களில் காவல்துறையும், அலுவலர்களும் உடனடி நடவடிக்கை எடுத்தால், உயிரிழப்பவர்களின் உடலை வைத்து போராட வேண்டிய நிலை தமிழ்நாட்டில் இனி ஏற்படாது” என தெரிவித்தார். வரும் காலங்களில் சந்தேக மரணங்கள் குறித்து உரிய நேரத்தில் விசாரணை நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக போராட வேண்டிய அவசியம் ஏற்படாது என்பதை முழுமையாக நம்புவோம்.

இதையும் படிங்க:8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் - வீடியோ எடுத்து பகிர்ந்த 5 இளைஞர்கள் உட்பட 6 பேர் கைது!

Last Updated : Aug 2, 2022, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details