சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் தொடர் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 12 ஆண்டுகளாக இசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட எட்டுத் துறைகளின்கீழ், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து ஆண்டுதோறும் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதுவரை இவர்களை அரசு தங்களது பணியில் நிரந்தரம் செய்யவில்லை. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலின் பொழுது பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் அறிக்கை 181-இல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து எந்தவித தகவலும் இடம் பெறாததால் மீண்டும் போராட்டத்தினை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் பங்குபெற்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர ஓவிய ஆசிரியர் ஜோதிமணி மற்றும் தங்கமணி ஆகியோர் கூறும் பொழுது, "கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்களுக்குப் பணி நிரந்தரம் கிடைக்காது என்பதற்காக சிலர் வேறு பணிகளுக்கும் சென்றுவிட்டனர். சில பகுதி நேர ஆசிரியர்கள், தங்களின் வாழ்க்கை சூழல் மற்றும் பணி நிரந்தரம் ஆகியவற்றின் ஏக்கத்தால் இறந்துள்ளனர். இன்னும் சில ஆசிரியர்கள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர்.