சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, எச்.எல்.எல்.சுனாமி திட்ட குடியிருப்பு பகுதி, காசிமேடு (41-வது வட்டம்) பவர் குப்பம் மீனவர் திட்ட குடிசைப்பகுதிகளில் இன்று (ஜன.19) முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.
இதனை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஜேசிடி.பிரபாகர், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.ஸ். ராஜேஷ் ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
அதன் பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியதாவது, ’கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சரால் முதற்கட்டமாக மூன்று இடங்களில் அம்மா கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டது. இது போன்ற மினி கிளினிக்குகள் சென்னையில் 200 இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
கன்டெய்னர் மினி கிளினிக்
தற்போது வடசென்னையில் இராயபுரம், தண்டையார்பேட்டை திரு.வி.க. நகர் உள்ளிட்ட 57 பகுதிகளில் மினி கிளினிக் இயங்கிவருகிறது. இதன் மூலம் இதுவரை 35 ஆயிரம் பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, காசிமேடு பகுதியில் நவீன முறையில் கன்டெய்னரில் உருவாக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் சேவை இன்று முதல் மக்களுக்கு கிடைக்கப்பெறும்.
இந்த மினி கிளினிக்கில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் அறை, செவிலியர்கள் அறை, மருந்து கிடங்கு, பார்வையாளர் காத்திருப்பு அறை, டாய்லெட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.
கரோனா தடுப்பூசி
‘கரோனா தடுப்பூசி முகாம் சிறப்பாக நடக்கிறது. சென்னையில் 2 மையம் கூடுதலாக செயல்படுகிறது. முன்களபணியாளர்கள் 2 தடுப்பூசி தொடர்ந்து போடுவது நல்லது. தடுப்பூசி போட்ட அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்கள் 2 மண்டலத்தில் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகிறோம். அனைவரையும் நீக்கம் செய்யவில்லை. 200 பேர் பட்டியல் எடுத்து இருக்கிறோம். வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் கூடுதலான தடுப்பூசி மையம் அமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்துவருகிறது. சென்னையில் இன்னும் 55 மினி கிளினிக் வடசென்னை பகுதியில் தொடங்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்’ என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மினி கிளினிக்கை தொடங்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி கூடுதல் சுகாதார துறை அலுவலர் லஷ்சுமி, மாநகராட்சி மண்டல அலுவலர் வெங்கடேசன், சுகாதாரத்துறை மண்டல அலுவலர் கயல்விழி, செயற் பொறியாளர் விக்டர், ஆர்எஸ்.ஜெனார்தனம், மற்றும் பலர் இருந்தனர்.
இதையும் படிங்க:’மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை தொடக்கம்’-மருத்துவக்கல்வி இயக்குநர்!