வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை கனமழை முதல் அதீத கனமழை வரை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய துறைகளின் அமைச்சர்கள், அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இக்கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுரைகள் கீழ்கண்டவாறு,
- வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், இன்று(டிச.1) மாலையிலிருந்து போதுமான எரிபொருளுடன் ஜேசிபி, லாரி, மின்சார மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் போதுமான மின் கம்பங்களுடன் பாதிப்பு உள்ளாகக் கூடிய பகுதிகளில் முகாமிட வேண்டும்.
- கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்களும் முகாமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு கூடுதலாக 1,000 பணியாளர்களையும், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகளை பிற மாவட்டங்களிலிருந்து பெற்று தயார் நிலையில் வைக்க வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - தென் தமிழ்நாடு கடற்கரையோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறக்கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள், கன்னியாகுமரி (2), திருநெல்வேலி (3), தூத்துக்குடி (2), மதுரை (2) மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
- நீர் நிலைகளின் ஓரம், கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் இருக்க தேவையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அவ்விடங்களில் கண்காணிக்க காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். மேலும், தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்புகொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாதிப்பு உள்ளாகக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களையும், பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசிக்கும் குடும்பங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.
- நிவாரண முகாம்களில் குடிநீர், சுத்தமான கழிவறை, ஜெனரேட்டர் மூலம் மின்வசதி, பொதுமக்களுக்கு உணவு தயாரிக்க போதுமான அளவில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், தேவையான எரிவாயு அடுப்புகள், சிலிண்டர்கள், உணவு தயாரிக்க சமையலர்கள், பொதுமக்களுக்கு தேவையான பாய், போர்வை போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- கரோனா, இதர தொற்று ஏற்படா வண்ணம், அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமி நாசினிகள் (Sanitizers), முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும், சுகாதாரக் குழுக்கள் அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துப் பொருட்கள், பசுந்தீவனங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
- நடமாடும் தொலைத் தொடர்பு கருவிகளை தயார் நிலையில் வைத்து, தொலைத் தொடர்பு பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெட்ரோல், டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும்.
- பொது மக்கள் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள், சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதிகாரப்பூர்வ, நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவை தவிர TN-SMART செயலி, TWITTER - TNSDMA, அலைபேசி மூலமாகவும் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்திகள் அனுப்பப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை. என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் அற்றது' - சீரம்