சென்னை: கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரக்கூடிய நிலையில், மூன்றாம் அலை ஏற்படாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி இணை, துணை ஆணையாளர்கள், மருத்துவ உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் காணொலி வாயிலாக இந்தியாவின் மூத்த மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது, சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, வல்லுநர் குழுக்களுடன், மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.
மேலும் கரோனா தொற்று குறைந்து வந்தாலும், தொடர்ந்து RT-PCR பரிசோதனைகளை குறைக்காமலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை கண்காணிக்க அரசு அலுவலகங்கள், காய்கறி சந்தைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு அவ்வப்போது RT-PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பது குறித்து மாநகராட்சி கண்காணிப்பாளர்கள் மூலம் கண்டறிந்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.