சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நேற்று (பிப்.28) பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் பாஜகவிற்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இதனால் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரியவருகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றால் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இதற்கிடையில் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுக்கலாம் என்றும் அவர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.
ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். அதிமுகவில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளிப்பவர்களிடம் எவ்வாறு நேர்காணல் நடத்துவது என்பது குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கும், பரப்புரைகளை மேற்கொள்வதற்கும் குறைவான கால அவகாசமே உள்ளதால், விரைவில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.