சென்னை:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரப்பானி தலைமையில் துறை அதிகாரிகள் முன்னிலையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 2022-23 ஆண்டிற்கான நெல் கொள்முதல் தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சுமார் 2:30 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல் கொள்முதல், நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பது, நெல் உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், "நெல் கொள்முதல் தொடர்பான கருத்துகள் விவசாயிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துகளை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரை மே மாதம் திறந்த காரணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 22 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கூடுதலாக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
‘சன்ன’ ரக நெல்லை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும் . மக்கள் அதை தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே ‘சன்ன’ ரக நெல் அதிக அளவில் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் செயல் பாராட்ட கூடியதாக உள்ளது என கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டு காலத்தில் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வீணானது. தற்பொழுது நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகளை கட்டி வருகிறோம்.