சென்னை:கடந்த சில நாட்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கட்டுமானத் தொழிலில் பெரும் முடக்கம் ஏற்படுவதாகவும் கருதி சென்னை சிவில் இன்ஜினியரிங் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சென்னை சிவில் இன்ஜினியரிங் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன், "கடந்த பத்து நாட்களாக தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ பரப்பப்படுவது வடமாநிலங்களில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
ஹோலி பண்டிகை காலமாக இருந்தாலும் அதையும் தாண்டி 70% முதல் 90% வரை வட மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர். வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறுவதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கட்டடத் தொழிலாளர்கள் தேவை தமிழ்நாட்டிற்கு அதிகமாக இருக்கிறது.
கட்டுமானத்தொழிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 40% பேர் தான் உள்ளனர். மீதி 60% பேர் வடமாநிலத் தொழிலாளர்கள் தான். கடந்த சில நாட்களாக வட மாநிலத்தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுப்பதால் கட்டுமானத்தொழிலில் வேறு முடக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நாளுக்கு நாள் நமக்கு வேலை ஆட்கள் தேவை ஏற்படுகிறது. கட்டுமானத்தொழிலில் வட மாநிலத்தவரின் பங்கு குறைந்தால் தேவையான வேலை ஆட்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதோடு மட்டுமில்லாமல் வடமாநிலத்தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமானத்தொழிலுக்கு மட்டும் முடக்கம் இல்லை. அதனை சார்ந்த மணல் உற்பத்தி, சிமென்ட் உற்பத்தி, ஜல்லி உள்ளிட்ட அத்தனை தொழில்களும் முடங்குவதோடு அரசுக்கும் பெரிய வருவாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவது மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து தவறான அவதூறுகளைப் பரப்புபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, இதேபோல் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களும் வடமாநிலத் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து வீடியோ பதிவிட்டுள்ளதற்கும் சிவில் இன்ஜினியரிங் சங்கம் சார்பாக நன்றி" எனத் தெரிவித்தார்.
வடமாநிலத்தொழிலாளர்கள் ஊர் சென்றதால் கட்டுமானத்தொழில் முடக்கம் - சிவில் இன்ஜினியரிங் சங்கம் - Northern state Workers
வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கடந்த பத்து நாட்களாக கட்டுமானத் தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும் பெரிய வருவாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை சிவில் இன்ஜினியரிங் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Construction Industry Freeze says Civil Engineering Association