உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்புவாத சக்திகள் வாரணாசி அருகே உள்ள சோன்பத்ராவில் பழங்குடியின மக்களின் நிலத்தைக் கைப்பற்ற 24 வாகனங்களில் சென்ற வன்முறை கும்பல் 14 பேரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது. படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற உத்தரபிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பூகம்பமாக வெடித்தது. அவர்களை சந்திக்காமல் இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன் என பிரியங்கா காந்தி இரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில், காவல்துறையினர் பிரியங்கா காந்தியை கைது செய்ததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர், கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.