சென்னை: கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "கல்வி நிறுவனங்களில் பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட விடாமல் மோடி அரசு தடை செய்துள்ளது. மோடி பிரதமர் ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
2022 -2023 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.