சென்னை:கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு-வை சந்தித்து பாஜக பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்த காணொலி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, "பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பில் இருந்த கே.டி ராகவன் குறித்து காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கே.டி. ராகவனை முறையாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பாஜக மௌனம்
இதுபோன்று பாஜக நிர்வாகிகள் மீது பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவைகளை தட்டிக் கேட்காமல் பாஜக தலைவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலை தொடர்கதையாகி வருகிறது. பாஜக-வில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.
டிஜிபி அலுவலகத்தில் எம்.பி ஜோதிமணி புகார் பொள்ளாச்சி பாலியல் சம்பவம்
கடந்த ஆட்சியின்போது அதிமுக-வை பாஜக-வும், பாஜக-வை அதிமுக-வும் பல்வெறு பாலியல் புகார்களில் இருந்து மாறி மாறி காப்பாற்றியுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அடிமட்டத்தில் உள்ள நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுப்போம். பெண்களுக்கு தேவையான நியாயங்கள் இந்த ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி உரிய நியாயத்தை பெற்றுத் தரவேண்டும். இது போல் அடுத்தடுத்து எத்தனை காணொலி வந்தாலும் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?