சென்னை:தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டில் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரத்தில் காவல் துறைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் கானத்தூர் காவல் துறையினர் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், கடந்த மாதம் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது போக்குவரத்து காவல் துறையினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பாஜக நிர்வாகிகள் போக்குவரத்து காவல் துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளனர்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நேற்று (அக்.26) நுங்கம்பாக்கம் உதவி ஆய்வாளர் மருது, புழல் சிறைக்குச் சென்று அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்த நிலையில், மூன்று பிரிவின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது முதல்வர் படத்தை அகற்றிவிட்டு பிரதமர் படத்தை ஒட்டிய வழக்கில் அமர் பிரசாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நான்காவது நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி சுந்தர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கில், அமர் பிரசாத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அமர் பிரசாத் ரெட்டி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதேபோல் காவல்துறைக்கு இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அடுத்த மாதம் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் மீண்டும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கானத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டியை புழல் சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். மேலும் தற்போது கோட்டூர்புரம் காவல் நிலைய வழக்கில் நிபதனை ஜாமுன் கிடைத்துள்ளதால் மற்ற வழக்குகளுக்கும் நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 77வது ஆண்டு காலாட்படை தினம் கொண்டாட்டம்!